Tuesday 16 July 2019

ஆற்றாமையில் உழலும் ஆண்டிகள்


சைதாபேட்டை ரயில் நிலையத்தில் தாடிவைத்து, அழுக்கான ஆடையணிந்த வயதான மனிதர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த ஜோல்னாபையில் குரங்கை வைத்துக்கொண்டு  மின்ரயிலுக்காக நின்றுக்கொண்டிருந்தார். ரயில்நிலையத்தில் அவசரவசரமாக கடந்து செல்லும் மனிதர்கள் யாருமே அவரையோ, குரங்கு குட்டியையோ கண்டுக் கொள்ளவே இல்லை. நாம் காலாவதி ஆகிவிட்டதாய் கருதும் தொழில்களும், அதை செய்யும் மனிதர்களும் எங்கையோ ஒரு மூலையில் நம்மிடையே வசித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நாம்தான் அவர்களை கண்டுக்கொள்வதோ, பொருட்படுத்துவதோ இல்லை.


தி.ஜானகிராமனின் சிறுகதைகளில் தனித்துவமான ஓன்று “பஞ்சத்து ஆண்டி”. இது ஐம்பதுகளில் வெளிவந்த சிறுகதை. காலம்காலமாக கைத்தறி நெசவு செய்த மக்கள் எந்திர நெசவுக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ள இயலாமல் வேலை, வருமானம் இழந்து பிழைப்புக்காக ஊர்விட்டு அந்நிய நிலங்களுக்கு செல்லும் மனிதர்களில் ஒருவனான நன்னையன் என்பவனை பற்றிய கதை. இது தி.ஜாவின் நண்பரும் தமிழின் மிகமுக்கிய எழுத்தாளருமான எம்.வி வெங்கட்ராமின் வாழ்வை மையமாகக்கொண்டு புனைந்ததாகவும் இலக்கிய உலகில்  கூறுவர்.

பிழைப்புக்காக சொந்த நிலத்தை விட்டு விடியற்காலை அந்நிய நிலத்திற்கு வரும் நன்னையன், மனைவி, குழந்தைகள் ஒரு வீட்டுத் திண்ணையில் ஒண்டுகிரார்கள். சொந்த நிலத்தை விட்டு வெளியேறுவது போல் கொடுமை வேறில்லை. அந்த மண், அதன் காற்று அவன் சூழலியல் சமநிலையுடன் வளர்ந்த ஒருவனின் உடல் திடீரென அந்த நிலத்திடமிருந்து அவன் உடலை துண்டிப்பது முதலில் சமநிலை குலைதல். புதிய நிலத்தில் அவன் உடலின் உஷ்ண நிலை சமநிலை இழக்கும். அதனால் மனமும் நிதானம் இழக்கும். உணவு செரிக்கும் நேரத்திலும் மாறுதல் நிகழும், போகப்போக அது பழகிப்போகும். புதிய ஊர் திண்ணையில் திண்ணைக்கு உரிமையாளரான  அக்ரகார பெண்மணி நன்னையன் குடும்பத்தை  துரத்திவிட கோயில் திண்ணைக்கு நகர்கிறார்கள். அப்போது கூட்டம்கூட்டமாக காவி உடையணிந்த ஆண்டிகள் ஊர்வலம் போகிறார்கள். ஊர் பெரிய மனிதன் ஒருவன் புரட்டாசி சனி அன்று சோறு போட்டு காசும் கொடுப்பதாக சொல்ல நெருடலாக ஊர் பெரியமனுஷன் வீட்டிற்கு செல்கிறான். பிசைகாரர்களுடன் சேர்ந்து அமர மனம் நிலைகொள்ளவில்லை. வேறுவழியில்லை. உட்காருகிறான்.


பரம்பரை ஆண்டிகளுக்கு புதிய ஆண்டி வந்து சேருகையில் ஒரு குதுகலிப்பு நேரிடுகிறது. ஆகா...! நம் நிலைக்கு மேலும் ஒருவன். பேச்சுக் கொடுக்கிறார்கள். உரையாடுகிறார்கள். “எத்தினி நாளைக்கு இருக்கிறதை வித்து திங்க முடியும்! மூக்குலே, கையிலெ இருக்கிற வரைக்கும் நகைதான். வித்துக் காசாக்கிட்டா, ரெண்டு நாள் சோறுதானே!  என்று தன் நிலையை ஆற்றாமையோடு சொல்கிறான். சிறிது நேரத்தில் அவர்களிடமிருந்து விடைபெறுகிறான். அங்கிருந்து முதலியார் என்னும் சமூகத்தின் முக்கிய நபரை சந்திக்கிறான். அந்த காலத்தின் பணக்காரனுக்கே உண்டான படாடோபம். நன்னையனை பேசவிடவில்லை. உயர் ரத்த அழுத்தத்திற்கு மாத்திரை போடுபவர் என்பது முதலியாரின் பேச்சிலேயே தெரிகிறது. அந்த வீட்டருகில் குரங்காட்டி ஒருவன் வித்தைக்காட்டிக் கொண்டிருக்கிறான். குரங்காட்டி நன்னையனின் நிலையை சரியாக உணர்ந்து ஏதாவது செய்ய வேண்டுமென நன்னையனிடம் உரையாடி தன்னிடமிருக்கும் இன்னொரு குரங்கு வைத்தியலிங்கத்தை தன் இளம்மனைவி காளியின் அனுமதியைப் பெற்று நன்னையனுக்கு அளிக்கிறான். மிகத்தயக்கத்துடன் வைத்தியலிங்கத்தை பெற்றுக்கொண்டு செல்கிறான். தன் குடும்ப பாரத்தை நீதான் சுமக்க போறியா? என உறங்கிக் கொண்டிருக்கும் குரங்கிடம் கேட்டவாறு நன்னையனும் உறங்குகிறான். திடீரென சப்தம் கேட்டு கண் விழிக்கையில் குரங்கு மின்கம்பத்தில் தாவி கருகி கீழே விழுந்து மரணிக்கிறது. ஊரே கூடி நிற்க வைத்தியலிங்கத்திற்கு இறுதிச்சடங்கு நடக்கிறது.  குரங்கின் கையிலே பூமாலை கொடுத்தாப்பலே பண்ணிட்டீங்களே சாமி!என்று குரங்காட்டியின் மனைவி நன்னையனைப் பார்த்து வெதும்புகிறாள். தன் குடும்பத்தின் பாரம் சுமக்க வந்த வைத்தியலிங்கத்தை பறிகொடுத்த ஆற்றாமையில் குரங்கின் சமாதிமுன் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கினான் என்று நிறைவடைகிறது.

இந்த கதை மிகப் பழமையானது. ஆனால் இதன் அரசியல் நவீனத்தன்மை உடையது. அந்த புள்ளியில்தான் “பஞ்சத்து ஆண்டி” நவீன இலக்கியத்தின் கூறுகளுக்குள் உட்படுகிறது. தொழில்நுட்பம் சார்ந்து ஒருவன் முன்னோக்கி வர முடியாமல் இருப்பது, ஒரு தனிமனிதனாக நவீனத்தை முற்றிலும் நிராகரிப்பது மற்றும் சமூகத்தை தேக்கமடைய செய்தல் என்ற கருத்தும் முன்வைக்கபடுகிறது. ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் உள்ள மனிதனுக்கு தனக்கு தெரிந்த, தான் விரும்பிய ஒரு தொழிலை செய்வதில்தான் ஜனநாயகம் முழுமை அடைகிறது. அவன் விரும்பாத காரியத்தை, நான் உனக்கு நல்லது செய்கிறேன், மேம்படுத்துகிறேன் என வதைப்பது ஒருவித பாசிசம்தான்.

நவீனத்தை சொல்லி தான் விரும்பும் தொழிலை செய்ய மறுக்கும் அரசியல் சுயஜாதியின் பெயரால் கட்டமைக்கப்பட்டிருக்கும் தொழில்களிடம் இருந்து ஒருவன் வெளியேற விரும்பினால் சுலபமாக வெளியேற அனுமதிப்பதில்லை. அவனும், அவன்சார்ந்த தொழிலும் சிறும்பான்மையாகி ஒருநாள் காணாமல் போய்விடுகிறான். காணாமல் போவது நியாயம்தான் என சமூகத்தினால் அவனுக்கு கற்பிக்கப்பட்டுவிடுகிறது.

திறமைகள் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையாக காணப்படும். நன்னையன் சுயதொழில் மூலம் தன் குடும்பத்துடன் நிறைவாக வாழ்ந்த வாழ்வை தொடர இயலவில்லை. அங்கே நவீனம் என்ற ஒன்று கார்ப்பரேட் கட்டமைப்பு நிறைவான வாழ்வை தவிடு பொடியாக்குகிறது. நீ எங்களுடன் நவீனமாக மாறு அல்லது அழிந்து போ..! என்று கட்டளையிடுகிறது. நீங்கள் வாழ்ந்த வாழ்வைக்காட்டிலும் அதிக பொருளாதார மேம்பாட்டை வழங்குவோம் என ஆசைக்காட்டி அதிக மனிதர்களை தன்வசப்படுத்தி இழுக்கிறது. எந்த அரசியலால் தான் வீழ்த்தப்படோம் என அறியாத அப்பாவி நன்னையன்களை நிர்மூலமாக்குகிறது.

நவீனம் என்பது தொடர்ச்சியாக நடந்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் மறுகருத்து இல்லை. பழமைக்குள் தேங்குவது தேசத்தின் வீழ்ச்சி. நவீனம் தேசத்திற்கு அத்தியாவசியமான ஒன்றுதான். எந்த ரீதியில் அத்தியாவசியம் என உங்களின் நோக்கில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விளம்பரப்படுத்தலாம். நெற்றியில் துப்பாக்கியை பிடித்துக்கொண்டு நீ மாறியே ஆக வேண்டும் என சொல்வது கண்டிப்பாக பாசிசம். தன்னை அடுத்த நிலைக்கு தகவமைக்க முடியா எளிய நன்னையன்களுக்கு அவர்கள் விரும்பும் வாழ்வின் நிறைவை அவர்களுக்கு வழங்குவதை நடைமுறைபடுத்துவது தான் சரி.

ஒரு நாட்டின் அடிப்படை வளர்ச்சியை சாமானியர்களே கட்டமைக்கிறார்கள். சாமானியர்கள் தத்தமது தொழிலில் மேம்படுவதற்கு முன் தொழில்நுட்பம், நவீனம் என்று குற்ற உணர்வுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறோம். நவீனம் சார்ந்த அனைத்து தரப்பையும் பரிசீலனையின்றி ஏற்றுக்கொண்டதினால் மூலத்தை இழந்து நிர்கதியாகி கொண்டிருக்கிறோம். நாட்டில் ஏதோ ஒரு துறையில் நவீனத்தை செயல்படுத்துவதன் மூலம் பல்வேறு மூலத் தொழில்கள் முடிவுக்கு வருகிறது. ஒரு சங்கிலி போன்று நவீனம் சாமானியர்களை உள்ளிழுத்து அடிமைப்படுத்துகிறது. மேலும் இந்த நவீனமும், தொழில்நுட்பமும் நேரடியாக அயல்நாட்டின் கட்டமைப்பிலிருந்து வருகையில் விளைவுகள் பெரிதாகும். காரணம் அவர்களுக்கு மூலத்தை குறித்த எந்த பிரக்ஞையும் இருப்பதில்லை. முதலீட்டையும், லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொள்வர்.  
“பஞ்சத்து ஆண்டி” ஐம்பதுகளில் எழுதியது. ஆனால் உலகமயமாக்கலுக்கு பின்தான் தான் விரும்பாத தொழிலை, பணத்திற்காக, குடும்பத்திற்காக, சமூக அந்தஸ்திற்காக செய்வது அதிகமானது. அந்த விதத்தில் இக்கதையை எழுதிய காலகட்டத்தின் அடிப்படையில் பார்க்கும்போது  தி.ஜா ஒரு மாபெரும் தீர்க்கதரிசி.


நம் நகரங்களில் கனவுகளை சுமந்துக்கொண்டு தினம்தினம் வந்திறங்குகின்றனர். ஆனால் கனவுகளை வெறும் கனவுகளாகவே வைத்து டாக்ஸி டிரைவர், உணவுகளை டோர் டெலிவரி செய்யும் வேலை உள்ளிட்ட எண்ணற்ற வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வாழ்வை ஆற்றாமையுடன் கடத்துகின்றனர்.  பொறியியல் படித்துவிட்டு தங்கள் கனவுகளை கைவிட்டு, சமூகம் கொடுக்கும் அழுத்திற்காக பணம் மட்டுமே வாழ்க்கையென நம்பி, விதவித பதார்த்தங்களை எடுத்துக்கொண்டு குண்டும்குழியுமான சாலையில் தத்தித்தாவி செல்லும் zomato வாலிபரின் மோட்டார் சைக்கிளின் பின்புறம் “கனவு காணுங்கள்” என்ற வாசகம் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது.