Tuesday 21 January 2020

கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் உரை...!


அபினி நூல் வெளியீட்டில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஆற்றிய உரை மிகச் செறிவாக இருந்தது. கவி மனங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படியொரு நுட்பமான கவிஞரை இப்போதுதான் முதன்முதலாக பார்க்கிறேன். காரணம் அவர் கண் விழிக்கையில் காணும் புறக்காட்சிகளிலிருந்து, பீட்டா மனம் யோசிக்கும் அகக்காட்சிகள், அதிலிருக்கும் சப்தங்கள், அதற்காக வழங்கப்பட்டிருக்கும் மொழிகொண்டு அகத்திற்குள் செயல்படும் தன்மை என வெளி உலகின்  காட்சிக்கும், சத்ததிற்கும் தனித்தனியாக கூறாய்வு செய்து உள்வாங்குகிறார். அதில் இருக்கும் லயம், வேதிக்கூறுகள் என அனைத்தையும் அவரால் பகுப்பாய்வு செய்ய முடிகிறது.

அபினி நாவல் பற்றி புதிய பார்வையிலான கோணங்களை முன்வைத்து, சில முக்கியமான தருணங்களை எனக்குள் வெளிச்சம் இட்டு காட்டினார். இந்த நாவலை எந்த புள்ளியில் எழுத தொடங்கினேன் என்றால், தஸ்தாயேவஸ்கியின் “கரமசாவ் சகோதரர்கள்” படித்து முடித்தபோதுதான். அதை ஒரு குறிப்பிட்ட தரப்புக்குள் அடக்க முடியாதென்றே கருதுகிறேன். மனிதன் தன் வாழ்நாளில் கண்ட, காணப்போகும் அனைத்துவித மனித மனங்களையும் அந்த ஒரே பிரதியில் அறிந்துக் கொள்ளலாம். அப்படி ஒரு பிரமாண்டமான நாவல் வடிவம் அது. அதில் நான் கண்டுக்கொண்ட ஒரு சிறுக்கூறுதான் இருத்தலியம். அதற்குள் நவீனத்தை புகுத்தியதற்கான காரணம், இந்த சமூகத்திற்கான தற்போதைய தேவையாக உணர்கிறேன்.

இந்த வகையறா நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள் நாம் அதிகம் காணும் மனநிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு அந்நிய நிலையில் அணுகும் என குறிப்பிட்டிருந்தார். உதாரணமாக ஜேஜே சில குறிப்புகள், 18 ஆவது அட்சக்கோடு ஆகிய படைப்புகளைக் குறிப்பிட்டார். அப்போது மீண்டும் எனக்குள் ஒரு பெரும் வெளிச்சத்தை பாய்ச்சியதை உணர முடிந்தது. காரணம் நானே இந்த பொது சமூகத்திற்குள் வாழ்ந்தாலும், முற்றிலும் அந்நியனாக உணர்பவன். எனக்கும் பொது சமூகத்திற்குமான இடைவெளி பெரிதாக இருப்பதால், எனக்கும் என் எழுத்துக்குமே மிகப்பெரிய இடைவெளி உருவாகிறது. ஆனால் தற்போது அது படிப்படியாக குறைந்து மனிதர்கள்மேல் பிரியம் உருவாகிறதையும் உணர்கிறேன். இந்த நாவலைப் பொறுத்த வரையில் எனக்குள் நிகழ்த்திக்கொண்ட ஒரு போர் எனலாம். என்னிடமுள்ள ஆண்மைக்கும், பெண்மைக்கும் இடையிலான போர். அதை எழுதியது மிகச் சவாலாக இருந்தது. ஒரு ஆண் எழுத்தாளர் ஒரு பெண்ணை எழுதும்போது அதற்கு ஒரு உயிர்க்குறிப்பு உள்ளுக்குள் இருக்கும். என்னிடம் முழுவதுமாக அப்படி எந்த குறிப்பும் இல்லை.

இந்த நாவலைப்பற்றி எனது பதிப்பாளர் கார்த்திக் புகழேந்தி கூறிய கருத்தையும் முக்கியமானதாகக் கருதுகிறேன். “பொதுவாக தமிழ் சூழலில் கடந்தக்கால வாழ்வியல் அனுபவங்களை, நினைவுகளை, அல்லது தற்போதை யதார்த்தவாத நடப்புகளை மட்டுமே சுவைத்து அதன்வழி தன்னிலை உணர்வை பக்குவப்படுத்துவதுதான்  நம் பெரும்பான்மை மரபு. எதிர்காலத் தன்மை கொண்ட படைப்புகள் உடனடி கவனம் பெறாது, ஆனால் நிராகரிப்புக்கு சாத்தியமே இல்லை”.   

கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் அவர்கள் உரையின் காணொளி : https://www.youtube.com/watch?v=YOclqomaaQA&t=148s

Wednesday 9 October 2019

திரை எழுத்தாளராக அறிமுகமாகிறேன்...!


அன்பு சகோதரர் ஸ்ரீகண்டன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் மூலம் திரை எழுத்தாளராக அறிமுகமாகிறேன். திரைக்கதையில் முக்கியமான ஒரு பகுதியிலும், படத்திற்கான வசனத்திலும் பணிபுரிந்துள்ளேன். என்மீது நம்பிக்கைக்கொண்டு வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி. கிட்டத்தட்ட இரு வருடங்களுக்கு முன் ஒரு மாலையில் நான்கு சுவர்களுக்குள் படத்தின் கரு உருவானது. அது மெல்லமெல்ல வளர்ந்து தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

திரைக்கதைக்காக எவ்வளவு மெனக்கெடல் நிகழ்த்த வேண்டும், எவ்வளவு அற்பணிப்பு வேண்டும் என்று எனக்கு கற்றுத்தந்த மதிப்பிற்குரிய எழுத்தாளர்கள் திரு.சுபா அவர்களை நன்றியோடு நினைவுக்கூர்கிறேன். ஆர்வத்தையும், அற்பணிப்பையும் தகுதியாகக்கொண்டு எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி  நாள் முழுவதையும் ஒதுக்கி, மதிய உணவுடன் திரைக்கதை வகுப்பெடுத்தனர். நன்றி சார்.

படர்ந்து விரிந்திருந்த கதையை செதுக்கியவர் திரைக்கதை எழுத்தாளர் திரு.சாப் ஜான்(சாணக்யன், குணா, சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட படங்களின் முதன்மை எழுத்தாளர்). அவருக்கும் குழு சார்பாக நன்றிகள்.


சினிமா ஒரு பெரும்வணிகம் என்பதால் அதற்கேற்றார்போல் எக்கச்சக்கமான தடைகள் இருந்தன.  தடைகளிலிருந்து மீள, எந்த கோடாரி வெட்டும் படாத, சுற்றி பள்ளம் எதுவும் தோண்டாத பவோபாப் மரத்தை சரித்து போடுவதற்கு இணையான சிரமம் இருந்தது. அதற்கு அதீத நிதானம் தேவைப்பட்டது. நாங்கள் சற்று தளர்ந்தபோதும் வடத்தை பிடிநழுவாமல் நின்று இயக்குனர் பார்த்துக்கொண்டார்.  இயக்குனருக்கு வாழ்த்துக்கள்..!

Tuesday 16 July 2019

ஆற்றாமையில் உழலும் ஆண்டிகள்


சைதாபேட்டை ரயில் நிலையத்தில் தாடிவைத்து, அழுக்கான ஆடையணிந்த வயதான மனிதர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த ஜோல்னாபையில் குரங்கை வைத்துக்கொண்டு  மின்ரயிலுக்காக நின்றுக்கொண்டிருந்தார். ரயில்நிலையத்தில் அவசரவசரமாக கடந்து செல்லும் மனிதர்கள் யாருமே அவரையோ, குரங்கு குட்டியையோ கண்டுக் கொள்ளவே இல்லை. நாம் காலாவதி ஆகிவிட்டதாய் கருதும் தொழில்களும், அதை செய்யும் மனிதர்களும் எங்கையோ ஒரு மூலையில் நம்மிடையே வசித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நாம்தான் அவர்களை கண்டுக்கொள்வதோ, பொருட்படுத்துவதோ இல்லை.


தி.ஜானகிராமனின் சிறுகதைகளில் தனித்துவமான ஓன்று “பஞ்சத்து ஆண்டி”. இது ஐம்பதுகளில் வெளிவந்த சிறுகதை. காலம்காலமாக கைத்தறி நெசவு செய்த மக்கள் எந்திர நெசவுக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ள இயலாமல் வேலை, வருமானம் இழந்து பிழைப்புக்காக ஊர்விட்டு அந்நிய நிலங்களுக்கு செல்லும் மனிதர்களில் ஒருவனான நன்னையன் என்பவனை பற்றிய கதை. இது தி.ஜாவின் நண்பரும் தமிழின் மிகமுக்கிய எழுத்தாளருமான எம்.வி வெங்கட்ராமின் வாழ்வை மையமாகக்கொண்டு புனைந்ததாகவும் இலக்கிய உலகில்  கூறுவர்.

பிழைப்புக்காக சொந்த நிலத்தை விட்டு விடியற்காலை அந்நிய நிலத்திற்கு வரும் நன்னையன், மனைவி, குழந்தைகள் ஒரு வீட்டுத் திண்ணையில் ஒண்டுகிரார்கள். சொந்த நிலத்தை விட்டு வெளியேறுவது போல் கொடுமை வேறில்லை. அந்த மண், அதன் காற்று அவன் சூழலியல் சமநிலையுடன் வளர்ந்த ஒருவனின் உடல் திடீரென அந்த நிலத்திடமிருந்து அவன் உடலை துண்டிப்பது முதலில் சமநிலை குலைதல். புதிய நிலத்தில் அவன் உடலின் உஷ்ண நிலை சமநிலை இழக்கும். அதனால் மனமும் நிதானம் இழக்கும். உணவு செரிக்கும் நேரத்திலும் மாறுதல் நிகழும், போகப்போக அது பழகிப்போகும். புதிய ஊர் திண்ணையில் திண்ணைக்கு உரிமையாளரான  அக்ரகார பெண்மணி நன்னையன் குடும்பத்தை  துரத்திவிட கோயில் திண்ணைக்கு நகர்கிறார்கள். அப்போது கூட்டம்கூட்டமாக காவி உடையணிந்த ஆண்டிகள் ஊர்வலம் போகிறார்கள். ஊர் பெரிய மனிதன் ஒருவன் புரட்டாசி சனி அன்று சோறு போட்டு காசும் கொடுப்பதாக சொல்ல நெருடலாக ஊர் பெரியமனுஷன் வீட்டிற்கு செல்கிறான். பிசைகாரர்களுடன் சேர்ந்து அமர மனம் நிலைகொள்ளவில்லை. வேறுவழியில்லை. உட்காருகிறான்.


பரம்பரை ஆண்டிகளுக்கு புதிய ஆண்டி வந்து சேருகையில் ஒரு குதுகலிப்பு நேரிடுகிறது. ஆகா...! நம் நிலைக்கு மேலும் ஒருவன். பேச்சுக் கொடுக்கிறார்கள். உரையாடுகிறார்கள். “எத்தினி நாளைக்கு இருக்கிறதை வித்து திங்க முடியும்! மூக்குலே, கையிலெ இருக்கிற வரைக்கும் நகைதான். வித்துக் காசாக்கிட்டா, ரெண்டு நாள் சோறுதானே!  என்று தன் நிலையை ஆற்றாமையோடு சொல்கிறான். சிறிது நேரத்தில் அவர்களிடமிருந்து விடைபெறுகிறான். அங்கிருந்து முதலியார் என்னும் சமூகத்தின் முக்கிய நபரை சந்திக்கிறான். அந்த காலத்தின் பணக்காரனுக்கே உண்டான படாடோபம். நன்னையனை பேசவிடவில்லை. உயர் ரத்த அழுத்தத்திற்கு மாத்திரை போடுபவர் என்பது முதலியாரின் பேச்சிலேயே தெரிகிறது. அந்த வீட்டருகில் குரங்காட்டி ஒருவன் வித்தைக்காட்டிக் கொண்டிருக்கிறான். குரங்காட்டி நன்னையனின் நிலையை சரியாக உணர்ந்து ஏதாவது செய்ய வேண்டுமென நன்னையனிடம் உரையாடி தன்னிடமிருக்கும் இன்னொரு குரங்கு வைத்தியலிங்கத்தை தன் இளம்மனைவி காளியின் அனுமதியைப் பெற்று நன்னையனுக்கு அளிக்கிறான். மிகத்தயக்கத்துடன் வைத்தியலிங்கத்தை பெற்றுக்கொண்டு செல்கிறான். தன் குடும்ப பாரத்தை நீதான் சுமக்க போறியா? என உறங்கிக் கொண்டிருக்கும் குரங்கிடம் கேட்டவாறு நன்னையனும் உறங்குகிறான். திடீரென சப்தம் கேட்டு கண் விழிக்கையில் குரங்கு மின்கம்பத்தில் தாவி கருகி கீழே விழுந்து மரணிக்கிறது. ஊரே கூடி நிற்க வைத்தியலிங்கத்திற்கு இறுதிச்சடங்கு நடக்கிறது.  குரங்கின் கையிலே பூமாலை கொடுத்தாப்பலே பண்ணிட்டீங்களே சாமி!என்று குரங்காட்டியின் மனைவி நன்னையனைப் பார்த்து வெதும்புகிறாள். தன் குடும்பத்தின் பாரம் சுமக்க வந்த வைத்தியலிங்கத்தை பறிகொடுத்த ஆற்றாமையில் குரங்கின் சமாதிமுன் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கினான் என்று நிறைவடைகிறது.

இந்த கதை மிகப் பழமையானது. ஆனால் இதன் அரசியல் நவீனத்தன்மை உடையது. அந்த புள்ளியில்தான் “பஞ்சத்து ஆண்டி” நவீன இலக்கியத்தின் கூறுகளுக்குள் உட்படுகிறது. தொழில்நுட்பம் சார்ந்து ஒருவன் முன்னோக்கி வர முடியாமல் இருப்பது, ஒரு தனிமனிதனாக நவீனத்தை முற்றிலும் நிராகரிப்பது மற்றும் சமூகத்தை தேக்கமடைய செய்தல் என்ற கருத்தும் முன்வைக்கபடுகிறது. ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் உள்ள மனிதனுக்கு தனக்கு தெரிந்த, தான் விரும்பிய ஒரு தொழிலை செய்வதில்தான் ஜனநாயகம் முழுமை அடைகிறது. அவன் விரும்பாத காரியத்தை, நான் உனக்கு நல்லது செய்கிறேன், மேம்படுத்துகிறேன் என வதைப்பது ஒருவித பாசிசம்தான்.

நவீனத்தை சொல்லி தான் விரும்பும் தொழிலை செய்ய மறுக்கும் அரசியல் சுயஜாதியின் பெயரால் கட்டமைக்கப்பட்டிருக்கும் தொழில்களிடம் இருந்து ஒருவன் வெளியேற விரும்பினால் சுலபமாக வெளியேற அனுமதிப்பதில்லை. அவனும், அவன்சார்ந்த தொழிலும் சிறும்பான்மையாகி ஒருநாள் காணாமல் போய்விடுகிறான். காணாமல் போவது நியாயம்தான் என சமூகத்தினால் அவனுக்கு கற்பிக்கப்பட்டுவிடுகிறது.

திறமைகள் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையாக காணப்படும். நன்னையன் சுயதொழில் மூலம் தன் குடும்பத்துடன் நிறைவாக வாழ்ந்த வாழ்வை தொடர இயலவில்லை. அங்கே நவீனம் என்ற ஒன்று கார்ப்பரேட் கட்டமைப்பு நிறைவான வாழ்வை தவிடு பொடியாக்குகிறது. நீ எங்களுடன் நவீனமாக மாறு அல்லது அழிந்து போ..! என்று கட்டளையிடுகிறது. நீங்கள் வாழ்ந்த வாழ்வைக்காட்டிலும் அதிக பொருளாதார மேம்பாட்டை வழங்குவோம் என ஆசைக்காட்டி அதிக மனிதர்களை தன்வசப்படுத்தி இழுக்கிறது. எந்த அரசியலால் தான் வீழ்த்தப்படோம் என அறியாத அப்பாவி நன்னையன்களை நிர்மூலமாக்குகிறது.

நவீனம் என்பது தொடர்ச்சியாக நடந்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் மறுகருத்து இல்லை. பழமைக்குள் தேங்குவது தேசத்தின் வீழ்ச்சி. நவீனம் தேசத்திற்கு அத்தியாவசியமான ஒன்றுதான். எந்த ரீதியில் அத்தியாவசியம் என உங்களின் நோக்கில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விளம்பரப்படுத்தலாம். நெற்றியில் துப்பாக்கியை பிடித்துக்கொண்டு நீ மாறியே ஆக வேண்டும் என சொல்வது கண்டிப்பாக பாசிசம். தன்னை அடுத்த நிலைக்கு தகவமைக்க முடியா எளிய நன்னையன்களுக்கு அவர்கள் விரும்பும் வாழ்வின் நிறைவை அவர்களுக்கு வழங்குவதை நடைமுறைபடுத்துவது தான் சரி.

ஒரு நாட்டின் அடிப்படை வளர்ச்சியை சாமானியர்களே கட்டமைக்கிறார்கள். சாமானியர்கள் தத்தமது தொழிலில் மேம்படுவதற்கு முன் தொழில்நுட்பம், நவீனம் என்று குற்ற உணர்வுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறோம். நவீனம் சார்ந்த அனைத்து தரப்பையும் பரிசீலனையின்றி ஏற்றுக்கொண்டதினால் மூலத்தை இழந்து நிர்கதியாகி கொண்டிருக்கிறோம். நாட்டில் ஏதோ ஒரு துறையில் நவீனத்தை செயல்படுத்துவதன் மூலம் பல்வேறு மூலத் தொழில்கள் முடிவுக்கு வருகிறது. ஒரு சங்கிலி போன்று நவீனம் சாமானியர்களை உள்ளிழுத்து அடிமைப்படுத்துகிறது. மேலும் இந்த நவீனமும், தொழில்நுட்பமும் நேரடியாக அயல்நாட்டின் கட்டமைப்பிலிருந்து வருகையில் விளைவுகள் பெரிதாகும். காரணம் அவர்களுக்கு மூலத்தை குறித்த எந்த பிரக்ஞையும் இருப்பதில்லை. முதலீட்டையும், லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொள்வர்.  
“பஞ்சத்து ஆண்டி” ஐம்பதுகளில் எழுதியது. ஆனால் உலகமயமாக்கலுக்கு பின்தான் தான் விரும்பாத தொழிலை, பணத்திற்காக, குடும்பத்திற்காக, சமூக அந்தஸ்திற்காக செய்வது அதிகமானது. அந்த விதத்தில் இக்கதையை எழுதிய காலகட்டத்தின் அடிப்படையில் பார்க்கும்போது  தி.ஜா ஒரு மாபெரும் தீர்க்கதரிசி.


நம் நகரங்களில் கனவுகளை சுமந்துக்கொண்டு தினம்தினம் வந்திறங்குகின்றனர். ஆனால் கனவுகளை வெறும் கனவுகளாகவே வைத்து டாக்ஸி டிரைவர், உணவுகளை டோர் டெலிவரி செய்யும் வேலை உள்ளிட்ட எண்ணற்ற வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வாழ்வை ஆற்றாமையுடன் கடத்துகின்றனர்.  பொறியியல் படித்துவிட்டு தங்கள் கனவுகளை கைவிட்டு, சமூகம் கொடுக்கும் அழுத்திற்காக பணம் மட்டுமே வாழ்க்கையென நம்பி, விதவித பதார்த்தங்களை எடுத்துக்கொண்டு குண்டும்குழியுமான சாலையில் தத்தித்தாவி செல்லும் zomato வாலிபரின் மோட்டார் சைக்கிளின் பின்புறம் “கனவு காணுங்கள்” என்ற வாசகம் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது.  

Friday 21 June 2019

சுயவதை மனிதன்


நம் சமூகத்தில் பொருளாதரத்தில் மேம்பட்டு சமூக அந்தஸ்தில் அங்கீகாரம் அடைந்தபின், அதற்காக தான் அனுபவித்த பாடுகளையும், அதன்மூலம் வாழ்வை வென்றதையும் எண்ணிஎண்ணி சிலாகித்து, கடந்த காலத்தின் மூலமாக தன்னை ஒரு பலமான ஆளுமையாக முன்னிறுத்துவது உண்டு.

மனிதன் அதிகபடியான கஷ்டபாடுகளை அனுபவித்து வாழ்வை வெல்கிறான். வென்றபின் அவனின் போராட்ட வாழ்க்கை செய்தியாகி, வரலாறாகி ஒரு தன்னம்பிக்கை மனிதராக இந்த சமூகத்தில் இடம்பெறுகிறான். இந்த வெற்றியை அடைவதற்கு பெரும்பாலும் தன்னை சுயவதைக்கு ஒப்புதருகிறான். விதிவிலக்குகள் சில இருக்கலாம்.

முன்பு ஒருமுறை என் நண்பன் ஒருவன் வாழ்வில் நிறைய பிரச்சனைகள் எதிர்கொண்டான். அதை பற்றி நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கையில் என் வாழ்வில் இவ்வளவு இடர்கள் போதாது இன்னும் நிறைய சிக்கல்கள்,பிரச்சனைகள் வேண்டும் என்றான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போதுதான் புரிந்தது அவன் இடர்களை வலைவீசி தேடி தன்னகதிற்குள் போடுகிறான் என்று. அவனுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் அவன் மட்டும்தான் என புரிந்தது. இவ்வளவு இடர்களை எதிர்கொண்டால் மட்டுமே தான் இந்த சமூகத்தில் சாதனை அல்லது சாகச மனிதர்காளாக அறிவிக்கப்படமுடியும் என நம்புகிறான். வலுவான பிரச்சனை கிடைக்காதவர்கள் எளிய பிரச்சனையை பெரிதுபடுத்தி துன்பதிற்குள் பிரவேசிக்கிறார்கள். இந்த மனநிலை பொதுவான லவுகீகம் தொடங்கி கலைஞர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் சுயம் வதைவதை விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள்.

இது ஒரு வழக்கொழிந்த பழமையான நிலை என்றே கருதுகிறேன்.  இப்படி வெற்றி பெறும் மனிதன் தன் திறமையை மிஞ்சிய நிலையில்(Overated) வெற்றியடைகிறான். சிரமங்களை முன்னிறுத்தி முன்னேற்றம் காண்பவனிடம் கற்றல் என்பது நேர்த்தியாக நிகழாது. கற்றல், அறிதல் என்பது முன்னேற்றத்திற்கு தேவையில்லாதது என நம்ப தொடங்குகிறான். இப்படி அவனிடம் பழமைவாதமும் தன் சுயமாக தேடித்தேடி அனுபவித்த துன்பங்கள் பற்றிய பெருமிதங்கள் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் பிற்காலத்தில் இந்த சுயவதை மனிதர்கள்தான்  சமூகத்தில் மிக சக்தி வாய்ந்த மனிதர்களாக உருவாகிறார்கள். காரணம் சமூகம் இவர்கள் தேடித்தேடி அடைந்த துயரங்களை நாயகத்தன்மையாக கருதுகிறது. இதனால் ஒரு சூப்பர் மனிதனாக கருதப்படுகிறான். உதாரணமாக தன்னுடைய ஆதர்சமான நடிகர் ஒருவர் சிறப்பாக ஒரு படத்தில் பங்காற்றியுள்ளார் என்பதைவிட அவரின் வாழ்கை வரலாற்றைக் கொண்டே மதிப்பிடல்கள், சமூகத்தில் அந்த நடிகருக்கான நாயகபிம்பம்  கட்டமைக்கப்படுகிறது. இது ஒரு உணர்வுசார்ந்த மோசடியாகும். திறமைக்கு எதிரான போக்கு. அதீத திறமையுடன் முடங்கி போய்க்கிடப்பவர்களை ஒரு பெரும் பட்டியல் போட முடியும்.

தமிழகத்தில்  பெரும்பாலும் சினிமா அல்லது ஊடகத்தை முன்னிறுத்தி வருபவர்களே வெற்றியாளர்கள் என காலம்காலமாக நம்பவைக்கப்பட்டுளது. அதிலும் திரைப்பட உதவி இயக்குனராக இருக்கும் ஒருவர் இயக்குனராகும் காலம் என்பதுதான் மிகக் கொடியது. எனக்கு தெரிந்த நண்பர் தன் தினசரி சிக்கல்களை மிகைபடுத்தி கூறிக்கொண்டே இருப்பார். கூறிமுடித்தபின் சீக்கிரம் பெரிய ஆளாக வேண்டும். சாதிக்க வேண்டும் எனக் கூறுவார். அதிலிருந்துதான் புரிந்துக் கொண்டேன் தினசரி சிக்கல்களை தினம் அசைபோடுவது தான் சாதிப்பதற்கான ஊக்கமருந்து என்று. அவர்கள் விரும்புவது போன்றே திரையுலகம் போராட்ட வாழ்வை பின்னலாய் பிணைத்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு சினிமா உருவாக்குதல் தளத்தில் முதுகெலும்பாய் செயல்படும் உதவி இயக்குனருக்கு முறையான சம்பளம் இன்றுவரை இல்லை. படைப்புலகில் வெறும் கஷ்டபாடுகளினாலே முன்னணிக்கு வருகையில் திறமை மூன்றாம் பட்சம் ஆகிறது. திறமையாளர்களை விட, தான் மேலானவர் என்ற நம்பிக்கைக்குள் நுழைகிறார்கள். திறமையும் நுண்கலைநோக்கு படைத்தவரை மூன்றாம்பட்சம் ஆக்குகையில் கலை ஒடுக்கப்படுகிறது. அதனால் சமூகம் பின்னோக்கி இழுக்கப்படுகிறது. சுயவதை மனிதன் கலையுலகில் மட்டும் இருப்பதில்லை. அனைத்திடங்களிலும் ஆடையில் ரத்தக்கறையுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.  

சுயவதை மனிதர்களின் வெற்றிக்குப்பின் அதிகாரம் ஒரு அத்தியாவசிய தேவையாக மாறுகிறது. ஏதோ ஒரு அதிகாரத்தின் மூலம் திறமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அதிகாரம் இல்லையெனில் அதிகாரம் தன்வசம் இருப்பது போன்ற பாவனையை உருவாக்குவதும் அவர்களுக்கு சிரமம் இல்லை. அதிகாரம் நாளடைவில் பாசிசமாக வெளிப்படும். அதை அன்பின் பெயரால், கருணையின் பெயரால் வெளிபடுத்தக்கூட தயங்குவதில்லை. ஆனால் அறிவுஜீவி மனிதர்களோ  இவர்களை பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. பொருட்படுத்துவதில்லை என்பதை அவர்கள்  அறிந்துணர  போவதுமில்லை. தன் மனதின் சூட்சமங்கள் அறியாதவர்கள் இந்த அறிவுஜீவிகள் என தங்களுக்குள் நம்புகிறார்கள். இந்த நுண்ணிய அவதானிப்புகளை அவர்களுக்கு எளிதாக தன்வசப்படுகிறது எனில் எப்படி ஒரு அவிழ்க்கமுடியா  சிக்கலை வழங்கலாம் என காத்துக் கொண்டிருப்பார்கள்.

சுயவதை ஆளுமையை பழக்கப்படுத்தி நாளாகுகையில், அது தனிப்பட்ட ஆளுமைக்குள்ளும் அதிகமாக வெளிப்படும். சாதரணமாக முடிக்க வேண்டிய காரியத்தை பூதாகரமாக்கி  படாடோப படுத்துவார்கள். இது நேர விரயத்துடன் ஆற்றல் வீணடிப்பதாகும். உதாரணமாக பேசி தீர்க்க வேண்டிய காரியத்தை வேண்டுமென்றே தன் ஈகோவினால் உயர்நீதிமன்றத்தில் சந்திக்கும்படி செய்வார்கள். அதனால் இழப்பது பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லை.  பிரச்சனை இருந்துக்கொண்டே இருப்பதை ஒரு போதையாக மாற்றிக் கொள்வார்கள். பிரச்சனைகள் அதிகமாக புழங்கும் துறை என்ன என்பது லேசில் இவர்களுக்கு பிடிபட்டுவிடும்.

ஆரம்பநிலை சுயவதையினருக்கு குழுவாக இணைந்து பணிபுரிய ஏராளமான உளவியல் சிக்கல் தென்படும். ஒரு குறிப்பிட்ட துறையில் வல்லுனராக தன் பங்களிப்பை செலுத்தியபின்  ஒருங்கிணைப்பாளர் அடுத்ததுறை வல்லுனரிடம் பணி நிமித்தமாய் நாடுவார். அதை இவர்களால் சகிக்க இயலாது. அதனால் அந்த குழு உருவாக்கும் ஒன்றை ஏதாவது செய்து முட்டுக்கட்டை போடுவார்கள். கடைசியில் அந்த தயாரிப்பு முழுமையடையாமல் போகிறது. அதற்காக அவர்கள் கலங்குகிறார்கள். இந்த துன்பத்தையும் தன் வெற்றிக்கான சாலையில் போட்டு மிதித்து அக்கினி வெயிலில் அடுத்த துன்பத்திற்காக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்.  இவர்களுக்கு சுயநிலைபாடு என்று எதுவும் இல்லை. கடந்தகால சுயவதை முன்னோடியே இவர்களின் ஆதர்சம். அந்த முன்னோடியின் வாழ்க்கையையே இவர்களும் வாழ்வர். முன்னோடியின் பாடுகள் அளவிற்கு தமக்கு வரவில்லையெனில் பெரும் மன உளைச்சல்தான்.
அறிவுஜீவிகள் சுனாமியென தாக்கும் உயர்தர பிரச்சனைகளை தந்திரத்துடன் எதிர்கொண்டு எளிதாக களைகிறார்கள். இதைக் காணுகையில் எரிச்சல் அடைவார்கள். அல்லது கண்டும் காணாததுபோல் அடுத்த பிரச்சனையை நோக்கி நகர்வார்கள்.    

தன்னிருப்பில் ஈகோ குவியலாக காணப்பட்டாலும், அன்பான தோரணையோடு பழகுவதில் நல்ல நடிகர்கள். ஆனால் உடல் மொழியிலும், பார்வையிலும் இவர்களை இனம்காணுவது மிக எளிது. இப்படியான மனிதர்களே அதிகம் வெற்றி பெற்றிருப்பதால் அவர்களின் போக்குதான் தான் சரியானது என அடுத்த தலைமுறை சுயவதை மனிதர்களுக்கும் பின்தொடர்கிறது. இவர்களுக்குத்தான் அடுத்தவர்களின் வெற்றி பொறாமையாகவும், வெறுப்பாகவும் மாறி அவர்களை அழிக்க துடிக்கிறது. அதன்மூலம் கூட ஒரு பிரச்சனை உருவாகலாம் இல்லையா..? இவர் அஸ்திவாரத்தை யார்மீது வீசுகிறாரோ! அவருமே இந்த மனநிலையில் பயிற்சி அடைந்தவர்தான்.

சுயவதை மனிதர்கள் அனைவருமே பலவீனமானவர்கள். தன் இருப்பை நிறுவுவதில் தீவிர ஆர்வம் காட்டுவதற்கு இவர்களுக்குள் இருக்கும் போட்டி மனப்பான்மை முக்கிய காரணம். அறிவுஜீவிகளை பொருட்படுத்துவதில்லை. தேவைக்கு உபயோகிக்க அவர்களிடம் சிரித்து நளினமாக உரையாடுவார்கள். அவர்களின் பொருளியல் மதிப்பையும் இவரே தீர்மானிப்பார். அதை ஒரு உயர்ந்த மதிப்பாக மிகைபடுத்தி  காட்டிக்கொள்வார். ஒருவன் எத்தகைய சாதனை புரிந்தாலும், அரிய சிந்தனைகளை வழங்கியிருந்தாலும்,  இன்னொரு மனிதனுக்கு எந்தவித மனஸ்தாபத்தையும் அளிக்காமல் அறத்துடன் வாழ்ந்தாலும் இவையாவும் அவன் இருப்பிற்கான மரியாதையை அல்லது அங்கீகாரத்தை அளிப்பதில்லை. அவனின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பும் அதிகார பலமும் கொண்டே அவனின் இருப்பிற்கான அங்கீகாரத்தை சுயவதை சமூகம் வழங்குகிறது.   

சுயவதை மனிதர்கள் சமூகத்தில் முதன்மையாக ஆவதற்கும், மக்களின் ஆதர்சமாக ஆவதற்கும் ஒரு நீண்ட மரபு காணப்படுகிறது. உடலை மையமாகக் கொண்ட நிலபிரபுத்துவ மரபு. இங்கே சுயவதை என்பது உடல்வலிமையின் மாற்று வடிவம். போருக்கு சென்று வீரமரணம் அடையும் போர்வீரனை கொண்டாடுவதன் நீட்சி தான் இந்த சுயவதை. நிலபிரபுத்துவத்தை கடந்து முதலாளித்துவ மற்றும் நவீனத்துவத்தில் இந்த உடலை மையமான கொண்ட விழுமியங்கள் கிடையாது. இங்கே முக்கிய மூலதனம் மூளை மட்டுமே.

நவீன மரபின் சாதனையாளர் தன்னை மேம்படுத்த தினம்தினம் புதிதாக கற்றுக்கொள்வதில் மட்டுமே கவனம் இருக்கும். வளமையான சிந்தனையுடன் இருப்பதால்  பொதுநீரோட்டத்தில் தன்னை ஒப்புக்கொடுக்க முடிவதில்லை. அதனால்  பொருளியல் சார்ந்த தேவைகள் மிகையாக காணப்படும். பார்க்க பஞ்சத்து ஆண்டி போன்றுகூட காணப்படலாம். ஆனால் அதைக் குறித்த எந்த கவலையோ, குற்றச்சாட்டோ இந்த சமூகத்தின்மீது இராது. நான் கஷ்டபடுகிறேன், நிறைய நாள் பட்டினி கிடந்தது சாதித்தேன், கிழிந்த செருப்போடும், சட்டையோடும் இந்த தெருவில் நடந்து வேலை தேடினேன் என்பது போலான நிலபிரபுத்துவ கூச்சல்கள் இருப்பதில்லை. அமைதியாக தன்னை வளப்படுத்திக் கொள்வதில் மட்டும்தான் ஈடுபாடு இருக்கும். நாளடைவில் அசலான கலைஞனாக அவன் காலத்திற்குப்பின் அடையாளம் காணப்படுவான். சுயவதை மனிதர்கள் நிகழ்காலத்தில், கடந்தகாலத்தின் நிலபிரபுத்துவ விழுமியங்களின் வழி வாழ்வதால் தங்கள் காலத்திற்குப்பின் காலவதியாகிறார்கள்.  

ஐசக் பேசில் எமரால்ட்
22.06.2019

Tuesday 5 March 2019

உனக்கு 34 வயதாகிறது- எஸ். ராமகிருஷ்ணன்


நவீன தமிழ் மனம் உடைய சுகந்தி எனும் பெண்ணிற்கும் மரபின் பிரதிநிதியான அவளின் தந்தைக்கும் நடக்கும் கலாச்சார உளசிக்கல்தான் எஸ். ராமகிருஷ்ணனின் “உனக்கு 34 வயதாகிறது”. முப்பதைத்தாண்டும் சுகந்திக்கு திருமணம் ஆகவில்லை என தந்தையின் கவலை நாளுக்குநாள் அதிகமாகிறது. அண்ணன், தம்பி என இருவரும் திருமணம் ஆகி மரபிற்குள் தங்கிவிட, அதனை மீறும் திருமணம் மீது நம்பிக்கையற்ற சுதந்திர மனம் உடையவளாக சுகந்தி காணப்படுகிறாள். ஊரிலிருந்து மகளைக் காணவரும் தந்தை மகளின்  வீட்டில் தங்குவது வழக்கம். அங்கே தங்குகையில் திருமணம் செய்ய சொல்லி மிகுந்த அழுத்தம் தருகிறார். அது அவளிற்கு எரிச்சல் தந்தாலும் காலத்தின் சலனம் மற்றும் அதிலிருந்து விடுபடுதல்கள் மூலம் வாழ்வை மெல்ல நகர்த்திக் கொண்டிருக்கிறாள்.

சுகந்தி கதாபாத்திரத்தின் உளவியல் அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன சமூகம் திருமணம் என்னும் அமைப்பிற்குள் சென்றால்  சுயசுதந்திரம் பறிபோய்விடும் என நினைக்கிறது. அதற்கான சாயல்கள் இந்த சமூகத்தில் வலுவாக தென்பட, திருமணம் மீது அவநம்பிக்கை கொண்டவளாக காணப்படுகிறாள். ஆனால் முழுமையாக அவளிடம் ஒரு பின்நவீனத்துவ உளநிலை தென்படவில்லை. காரணம் தன் விடுதலை மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும் தன் நம்பிக்கைகளை சிதைக்கும் விதமாக நடந்துக் கொள்ளும் தன் குடும்பத்தையும், உறவுகளையும் முழுமையாக இழக்கவும் விரும்பவில்லை. இந்த நிலையில் நவீன பெண்கள் கொள்ளும் நிலை அவலம். சிந்தனை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கும். என்னதான் உறவாக இருப்பினும் அவர்களின் எள்ளல் கூட ஒரு கட்டத்தை தாண்டுகையில்  தன் கொந்தளிப்பையும் காட்டத் தவறுவதில்லை. அதுதான் அண்ணன் மனைவியுடன் அவள் கொள்ளும் பிணக்கு. தன்னைவிட இரு வயது குறைந்தவள் திருமணம் ஆகி குழந்தை பெற்று விட்டோம் என்பதற்காக தன் மீது அதிகாரத்தை செலுத்தும் மனநிலையை திருமணம் அளிக்கிறது. இது ஒரு முக்கியமான இடம். இந்த சமூகம் வயது, அந்தஸ்து, அழகை விட திருமணம் என்பது மிஞ்சிய அங்கீகாரமாக கருதுகிறது.
திருமணம் என்னும் அமைப்பிற்குள் பெண்கள் சிக்குவதால் தான் கொண்ட சுதந்திரம் முழுமையாக பறிபோய்விடும் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது இணையரின் மனநிலையைப் பொருத்தது. பெண்களுக்கு உள்ளுணர்வு அதிகம். திருமணத்தினால் தன் வாழ்வை நிறைவாக கொண்டு போக முடியாது என ஒரு பெண்ணின் மனம் முடிவெடுத்தால், அந்த முடிவின் தெளிவு அப்பெண்ணின் உள்ளுணர்வுசார் உளோநிலையின்  பிரதிபலிப்பு ஆகும். எப்படியிருந்தாலும் அந்த நிலையை இன்னொருவரால் அதன் வீச்சை  புரிந்துக்கொள்வது சிரமம். ஆனால் சமூகம் அப்படியெல்லாம் உங்களை சுயமுடிவெடுக்க விடமாட்டோம் என குரல்வளையை பிடித்து நெருக்குகிறது.
திருமணம் செய்யவில்லை என்றால் உங்களுக்கும் வரப்போகும் அபாயங்கள் என ஒரு பெரும்பட்டியலை தயார் செய்கிறது. அதில் இருக்கும் எதிர்மறையான அபாயங்கள் அனைத்தும் மரபான ஒரு காலாவதியான கலாச்சார உளநிலையில் ஆழ்ந்து படிந்துக் காணப்படுகிறது. ஒரு பெண் திருமணம் ஆகவில்லை என்றால் அவளுக்கு இன்னென்ன ரீதியிலான பிரச்சனைகள் வரும் என்பது எதார்த்தமான உண்மை. அது வெகுஜன உளவியலின் எதிர்மறையான நிலைப்பாடு. நவீன பெண்ணிற்கு தன் மனம் சுதந்திரம் அடைய வேண்டும் என விரும்பினாலும் தனக்கு உண்டான நெருக்கடியை நினைத்து உளநிலை தடுமாற்றம் அடையும். மேலும் மரபான தம் அன்பிற்குரிய நபர் தன்னால் அடையும் தடுமாற்றம் அதனால் உருவாகும்  பிறழ்வை பொருட்படுத்தாமலும் அவளால் கடக்க இயலாது. அதே நேரம் தன் சுதந்திர மனநிலையை இழந்து போலியான வாழ்வை வாழ விருப்பமும் இல்லை. இந்த சமூகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும்  அதன் விளைவாக உருவாக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களுக்கு அதனால் உருவாகும் சீண்டல்களையும் பொருட்படுத்தி தற்பாதுகாப்பாக இருக்க வேண்டிய சூழலும் உள்ளது. மேலும் உடல் அல்லது மன ரீதியாக தற்காலிகமாக ஒரு உறவுடன் இணைகையில் சரியான பின்நவீனத்துவ. நிற்க, வெறும்  நவீன புரிதல் இல்லையெனில் தன் சுதந்திர வாழ்வின் மீதே சந்தேகம் கொள்ளும் பொருட்டு உள நெருக்கடி ஏற்பட வாய்ப்பும் உள்ளது. சுய சுதந்திரம், தற்பாதுகாப்பு, அன்பிற்குரியவரின் நெருக்கடியை சமாளித்தல் என மூன்றையும் எதிர்கொண்டு தான் சுயமான வாழ்வை ஒரு நவீன மனம் படைத்த பெண்ணிற்கு வாழ இயலும்.
சமூகத்தின் மரபார்ந்த மனங்களில் எப்படி மாற்றத்தை உருவாக்குவது? உடனே ஒருவரை நவீனத்தை பற்றின புரிதலுடன் சுதந்திரமான வாழ்வை பற்றி புரிய வைத்தல் சிரமம். ஆனால் கலை என்னும் பேராயுதம் வழி நல்ல இலக்கியம், கவிதை, சினிமா வழி தரமான நவீனம் சார்ந்த புரிதல்களை அவர்களுக்கு அறியாமலே கலைவழி மெல்ல ஒரு சமூகத்திற்கு கொண்டுபோய் சேர்க்க முடியுமாயின் சமூகம் மேம்பாடு நிச்சியம் நிகழும். அதன் கால அளவு என்பது நூற்றாண்டுகூட ஆகலாம். ஆனால் மேம்பட்ட சமூகங்களில் வெறும் பிரச்சாரம் கொண்டு தற்காலிக மேம்படுத்தல் அல்லாமல் ஆழமான, செறிவான கலைகள் வழி நவீனம் சார்ந்த புரிதலுடன் மேன்மையடைந்த சமூகம் அதிகம். நம் சமூகமும் இந்த நிலையை வந்தடைந்ததில் கலைக்கு பெரும்பங்கு உள்ளது. தீர்வுகளை முன்வைக்கும் அரசியல் இல்லாத விவாதத்தை உண்டுபண்ணும் கலை இச்சமூகத்தில் நிகழுமாயின் எதிர்காலத்தில் சுகந்திகள் சுதந்திரத்தின் ருசியை மேலும் உணர்வார்கள்.   

Sunday 15 January 2017

அப்பாவின் புலிகள்

ஆர்.அபிலாஷ் அவர்களின்  அப்பாவின் புலிகள் சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தேன்.  புனைவிலும் புனைவின்மையிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். பொதுவாக மனித மனத்தின் சௌகரியமான பாதைகளிலேயோ  அல்லது அசௌகரியமான பாதைகளிலேயோ  பயணிப்பர், அனைத்து பாதைகளிலும் நாம் நம்பும் கலாச்சார விழுமியங்களின் எதார்த்த நிலையை கண்முன் விரிய செய்கிறார். மனித மனதின் அத்தனை சிந்தனை போக்குகளையும் அவருடைய  பாணியில் சென்று  அவரின் தனித்துவமான, உளவியல்  ரீதியான கண்ணோட்டத்தில்  தொட்டு அணுகுகிறார். அந்த விதத்தில் தமிழில் வெளிவந்த அனைத்து  சிறுகதை தொகுப்புகளிலும் தனித்து நிற்கிறது என்பேன். குறிப்பாக நான் பிறந்து வளர்ந்த  குமரி நிலத்தின் வாசனையை அனேக இடங்களில் முகர்ந்தேன். உதாரணமாக குன்னி முத்து, நடுதண்ணி முத்தம் போன்ற காட்சி  படிமங்கள் . தெளிவான விவரணை, கதை சொல்லும் நேர்த்தி  என  முதல் பத்தியிலையே முழுவதுமாக வாசகனை வசீகரித்து உள்ளிழுத்து வெளிவரமுடியாதபடி செய்கிறார்,  கவித்துவ  உவமைகளால் வர்ணனைகளில் வண்ணம் தீட்டிக்கொண்டே நகர்வது வாசகனுக்கு பல்வேறு கற்பனை எண்ணங்களுக்கு  வித்திடுகிறது. புனைவில் சில படிமங்களை வாசகன் நெருங்குகையில் அது தன்னை  உருமாற்றம் செய்கிறது. இலக்கிய தரத்திலிருந்து  வெளிவராமலும் வெகுஜன ரசனைக்கு உட்பட்டும் இருப்பது தனித்துவம். முக்கியமாக எழுத்து பயில்பவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.